மாணவியை கடத்தி 3-வது முறை திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூச்சி நாயக்கன்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசித்து வருகின்றார். இதனால் ரவியுடன் 2-வது மனைவி வசித்து வருகின்றார். இந்நிலையில் ரவிக்கும், நம்பியூரில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக 2 பேரும் செல்போனில் பேசி ஒரு கட்டத்தில் அந்த மாணவியை, ரவி காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதன்பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவி அந்த மாணவியை கடத்திச் சென்று 3-வது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் ரவி ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து குருமந்தூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மாணவியை பாதுகாப்பாக மீட்டனர்.