குளத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு இருப்பதை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வெண்கரும்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான குளம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த குளத்தை அதே பகுதியில் வசிக்கும் 4 பேர் ஆக்கிரமித்து தேக்கு மற்றும் கரும்பு பயிரிட்டு வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இதனால் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வருவாய்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் படி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், திட்டக்குடி துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் மற்றும் ஒன்றிய பொருளாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று குளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனையடுத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.