இயக்குநர் கெளதம் மேனன்- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில், தமிழ் சினிமாவில் ’மியூசிக்கல் ஹிட்’ என்று அனைவரானும் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகியவை ஆகும். இந்த இரு படங்களிலும் நடிகர் சிம்பு தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது சில ஆண்டுகளுக்கு பிறகு ’பப்பி’ எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்திருக்கும் நடிகர் வருண், கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்காக கெளதம் – ரகுமான் ஜோடி இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் விஜய்யை வைத்து கெளதம் மேனன் இயக்கப்போவதாக அறிவித்த ‘யோகன் அத்யாயம் ஒன்று’ என்ற திரைப்படம் அறிவிப்பு வந்ததோடு நின்றுவிட்டது. கைவிடப்பட்ட அந்த படத்தின் தொடக்கமாக இந்த படம் இருக்கலாம் என்ற உறுதிப்படுத்தாத தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.’எல் கே ஜி’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய மூன்று படங்களை வெளியிட்ட வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எனப்படும் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், வருணின் மாமா இஷாரி கணேஷ் ஆக்ஷ்ன், சாகசங்கள் கலந்த இப்படத்தை தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது.