Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளத்துக்குள் மிதந்த கார்…. சடலமாக மீட்கப்பட்ட வக்கீல்…. போலீஸ் விசாரணை….!!

குளத்துக்குள் வக்கீல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து நெல்லை செல்லும் நான்கு வழிச்சாலை மகாதானபுரம் பகுதியில் நாடான்குளம் இருக்கின்றது. அந்த குளத்தில் ஒரு கார் மிதப்பதைக் கண்டு அப்பகுதியில் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் குளத்துக்குள் மிகுந்த காரை காவல்துறையினர் மீட்டனர். அப்போது காருக்குள் அழுகிய நிலையில் வாலிபர் சடலமாக இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நெல்லை மாவட்டத்திலுள்ள வள்ளியூர் மேலசண்முகநாதபுரம் சி.எஸ்.ஐ .ஆலய தெருவில் வசித்து வரும் மார்ட்டின் லூதர்கிங் என்பதும், இவர் நீதிமன்றத்தில் வக்கீலாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் கடந்த 5-ம் தேதி வீட்டில் இருப்பவர்களிடம் குமரிக்கு போவதாக சொல்லிவிட்டு காரில் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். ஆனால் அதன்பின் மார்ட்டின் லூதர் கிங் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன்பின் வக்கீலின் குடும்பத்தினர் அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் மார்ட்டின் லூதர் கிங் குளத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

எனவே சொந்த ஊருக்கு அதிவேகமாக செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து காருடன் மார்ட்டின் லூதர் கிங் குளத்திற்குள் விழுந்திருக்கலாம் என்றும் வண்டியின் கதவை திறக்க முடியாமல் மூச்சுத் திணறி அவர் இறந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து கிடப்பதால் அந்த வழியாக சென்றவர்கள் குளத்தில் கார் இருப்பதை கவனிக்காமல் இருந்துள்ளனர். இதனால் 2 நாட்களுக்கு பிறகு குளத்தில் பாய்ந்த காரை பற்றி தகவல் தெரியவந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் வக்கீல் மார்ட்டின் லூதர் கிங் இறந்ததற்கு வேறு ஏதும் காரணம் இருக்குமோ என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |