விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அருந்ததியர் காலனியில் பொன்தங்கமாரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இந்நிலையில் பொன்தங்கமாரி புதுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்தங்கமாரியை 3 வாலிபர்கள் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்ததோடு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன் தங்கமாரி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார்படி காவல்துறையினர் புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது காவல்துறையினரை கண்டதும் 3 வாலிபர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை விரைந்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பொன்தங்கமாரியிடம் பணம் பறித்ததும், கொலை மிரட்டல் விடுத்ததும் 3 வாலிபர்கள் தான் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுக்கன்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த மாரியப்பன், புதூர் காலனி தெருவைச் சேர்ந்த ரகு, கீழ தெருவைச் சேர்ந்த முகேஷ் போன்றோரை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.