பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாத்திமாநகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருக்கின்றார். இதில் பத்மாவதி தனது பேத்தியுடன் தஞ்சை ரயில்வே கீழ்பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது தனது கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கைப்பையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது பத்மாவதிக்கு தெரியவந்தது.
இதனையடுத்து பத்மாவதி ஷேர் ஆட்டோவில் இருந்த சக பயணிகளிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் கைப்பை பார்க்கவில்லை என்று கூறியதால் பத்மாவதி ஆட்டோவிலிருந்து இறங்கி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பத்மாவதி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.