Categories
மாநில செய்திகள்

நெல்லையில் ரூ15 கோடியில்… தொல்லியல் அருங்காட்சியகம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

நெல்லை நகரில் ரூ 15 கோடியில் நவீன வசதிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் தொல்லியல் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது. கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு தானே நேரில் சென்று பார்வையிட்டேன். கீழடி அகழாய்வில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு ஒன்றை கண்டறிந்தோம்.. இந்த வெள்ளிக்காசு கி.மு 3 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது.. கொற்கை துறைமுகம் கிமு 6ஆம்  நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த நெல்லை நகரில் ரூ 15 கோடியில் நவீன வசதிகளுடன் தொல்லியல் அருங்காட்சியகம் (பொருநை) அமைக்கப்படும்.

பொருநை ஆற்றங்கரையில் நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்காவின் பீட்டா அனலிடிகல் ஆய்வு மையத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன.. கேரளாவின் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக்காடு, ஒடிசாவின் பாலூர் போன்ற வரலாற்று சிறப்பு உடைய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்..

ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாட்டு அடையாளங்களை தேடி இனி உலகெங்கும் பயணம் செல்வோம். ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகலை பகுதிகள் அடங்கிய பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தில் ஆய்வு செய்யப்படும்.. இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுத வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நின்று நிறுவுவதே இந்த அரசின் லட்சியம் என்று கூறினார்..

Categories

Tech |