ஆசிரியர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் மலைராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுன் தங்கம் என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மலைராஜன் திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் சாத்தூரில் நடந்த கொலை சம்பவத்தில் மலைராஜன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு மலை ராஜனை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனை அடுத்து மலைராஜன் சிவகாசியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்று மலைராஜன் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து தனியார் விடுதி மேலாளர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அறையின் கதவை திறந்து பார்த்தபோது மலைராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு காவல்துறையினர் மலைராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.