நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபுல்கோ நகரில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவானதாக தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அகாபுல்கோ நகரம் மட்டுமில்லாமல் மெக்சிகோ சிட்டி உட்பட பல நகரங்களும் பயங்கரமாக அதிர்வடைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் அகாபுல்கோ நகரில் நிலநடுக்கத்தால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததோடு தேவாலயம் ஒன்று முற்றிலுமாக இடிந்து விழுந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பல இடங்களிலும் கட்டிடங்களில் விரிசல்கள் பெரிதளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கொயுகா டி பெனிடெசிஸ் நகரில் திடீரென மின்கம்பம் ஒன்று நிலநடுக்கத்தின் போது சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மெக்சிகோ சிட்டி, அகாபுல்கோ, ஓக்சாகா, மோரேலோஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கம் காரணமாக மின்சார விநியோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நகரங்களில் இருளில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மின் இணைப்பை மீண்டும் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.