திருமண நிகழ்ச்சியில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் கிராமத்தில் ஒருவரின் திருமண நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் அரிவாளுடன் நடனம் ஆடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சாத்தான்குளம் பகுதியில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனையடுத்து பொதுஇடத்தில் பொதுமக்களுக்கு பயம் ஏற்படுத்தியதாக சாத்தான்குளம் முஸ்லிம் மேல தெருவைச் சேர்ந்த செல்லப்பா, கிங்ஸ் டன் ஜெயசிங் மற்றும் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இதில் கிங்ஸ் டன் ஜெயசிங் கேரளாவில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் கேரளாவிற்கு சென்று அவரை கைது செய்தனர். அதன்பின் கிங்ஸ் டன் ஜெயசிங்கிடம் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டார். இதனைதொடர்ந்து கிங்ஸ் டன் ஜெயசிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.