லாரி மோதி 4 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் லாரியில் பாரங்களை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் பஞ்சங்குட்டை நால்ரோடு அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி அங்குமிங்குமாக சென்று சாலையோரத்தில் இருந்த 4 மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 மின் கம்பங்களும் முழுவதுமாக சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின்சாரத்தை துண்டித்தனர். இதன் காரணமாக லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இவ்வாறு 4 மின் கம்பங்களும் சேதமடைந்ததால் பஞ்சங்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புன்னம்சத்திரம் மின்வாரிய இளம் பொறியாளர் செந்தில் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து டிரைவரான கோவிந்தசாமியை கைது செய்ததோடு லாரியை பறிமுதல் செய்துள்ளார்.