பெண்கள் கிரிக்கெட் விளையாடக்கூடாது என தலீபான்கள் அமைப்பின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடகாலமாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். மேலும் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கையில் சிக்கியதால் அங்கு புதிய அரசை அமைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தலீபான்கள் அமைப்பின் தற்போதைய தலைவரான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய அரசை தோற்றுவிப்பது குறித்து தலீபான்கள் அமைப்பினருக்கும் ஹக்கானி குழுவினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்த பேச்சுவார்த்தையின் போது ஹக்கானி குழுவின் தலைவரான ஆனஸ்க்கும் தலீபான்களின் தலைவரான முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் இறுதியாக கைக்கலப்பில் முடிந்தது. இதில் தலீபான்களின் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே ஆன பிரச்சனையை நல்லமுறையில் பேசி தீர்ப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரான பைஸ் ஹமீது காபூலுக்கு வந்தார். அதிலும் தலீபான்கள் அமைப்பில் இருக்கும் பாகிஸ்தான் தரப்பினருக்கு உயர் பதவிகளை பெற்று தர பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆனால் இதில் இருக்கும் ஆனஸ் ஹக்கானி, முல்லா அப்துல் கனி பரதர் இருவருமே பாகிஸ்தான் ஆதரவாளர்கள். இருப்பினும் ஆனஸ் ஹக்கானி தீவிரமான பாகிஸ்தானி என்பதால் அவரை அதிபர் பதவியில் அமர்த்த பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்கிறது.
இதனை தலீபான்கள் தலைவரான முல்லா அப்துல் கனி பரதரின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக அதிபரை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் தலீபான்கள் அமைப்புக்குள்ளேயே கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. இது போன்று ஆப்கானிஸ்தானில் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எப்பொழுதும் ஆப்கானியர்கள் வெளிநாட்டினர் ஆதிக்கத்தை விரும்ப மாட்டார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் ஆப்கான் விவகாரங்களில் தலையிடுவது, அவர்களுக்கு விருப்பமானவர்களை ஆட்சிகள் கொண்டுவர முயற்சிப்பது போன்றவற்றை மக்கள் விரும்பவில்லை. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்காக பெண்கள் போராடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பெண்கள் 5-வது நாளாக தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது போன்ற உரிமைப் போராட்டங்களை தடுப்பதற்காக சில கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்துள்ளனர். அதில் “பெண்கள் தேவையின்றி போராட்டத்தில் ஈடுபட கூடாது. மேலும் கோஷமிடுதல், கையில் வாசகங்களை கையில் ஏந்திச் செல்லுதல் போன்றவற்றிற்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும்” என்று அறிவித்துள்ளனர். இதனையடுத்து தற்பொழுது பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்க தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இது குறித்து தலீபான்கள் அமைப்பின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் அகமதுல்லா வாசிக் ஆஸ்திரேலியா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது ” பெண்கள் எந்த விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஏனெனில் விளையாட்டில் பெண்கள் ஆடை விதிமுறைகளை இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக மீறிவிடுவார்கள். குறிப்பாக இது இணையதளம் உலகம் என்பதால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படும். அவற்றை அனைவரும் பார்க்கின்றனர். மேலும் இஸ்லாமும் இஸ்லாமிய எமிரேட்ஸ் கூட பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிப்பது இல்லை. அதே போல உடல் வடிவத்தை வெளிப்படுத்தும் விதமான விளையாட்டு போட்டிகளில் பெண்களை பங்கேற்பதை இஸ்லாமிய சட்டம் தடை செய்கிறது. இந்த நிலையில் தலீபான்கள் பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணி திட்டமிட்டுள்ள டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.