பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில் பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு விருதுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் பாரதியார் பற்றி ஆய்வு செய்த எழுத்தாளர்கள் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை அரசால் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.