தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் பணிகளுக்கு வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை,உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் உறுதுணையாக உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பின்விளைவுகள் ஏதாவது ஏற்பட்டால், அதனை சரிசெய்ய அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்படும். தடுப்பூசி முகாம் வரும் மக்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும்.
பெரியவர்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் ஏதாவது இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது. தடுப்பூசி செலுத்துபவர்கள் உடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்காகவும், கொரோனா நோயிலிருந்து விடுபடவும் இந்தத் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து மக்களும் இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.