தடையை மீறி விநாயகர் சிலையை வைப்பதற்கு முயற்சி செய்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்தல், ஊர்வலம் எடுத்து செல்லுதல் போன்றவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை மதிக்காமல் இந்து முன்னணியின் சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலையை ஊர்வலம் எடுத்துச் செல்வதாக அறிவித்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் வருடந்தோறும் பேருந்து நிலையம் அருகில் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கிறது.
அதன்படி இந்த வருடமும் அதே இடத்தில் சிலை வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோபி பேருந்து நிலையம் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 3 சக்கர சைக்கிளில் 2 விநாயகர் சிலைகளை ஊர்வலமாக பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் தடையை மீறி வந்ததாக 8 நபர்களை கைது செய்துள்ளனர் . மேலும் அவர்களிடமிருந்த 2 விநாயகர் சிலைகளையும், 3 சக்கர சைக்கிளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.