விளாத்திகுளம் பகுதியில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சூரங்குடி காவல்துறையினர் கடந்த 28-ம் தேதி வேம்பார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஆற்று மணல் கடத்தியதாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முத்தழகு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இததேபோன்று கடந்த மாதம் 10-ம் தேதி விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை திருடியதாக, கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். அதன்படி 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்கராஜ் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி முத்தழகு, கண்ணன் ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் கலா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.