தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், பாத பூஜைக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனா்.
நான்கு குழுக்களாகப் பிரிந்து சென்ற அலுவலர்கள், ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கல்கி பகவானின் மகன் என்.கே.வி. கிருஷ்ணாவிற்கும் சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித் துறை அலுவலர்களின் சோதனை மேற்கொள்ளப்பட்டது.மேலும், கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கியின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருகிறது. திருவள்ளூரை அடுத்த நேமம் உள்ளிட்ட இருபது இடங்களில் சுமார் 400 வருமான வரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.ஒரே நாளில் 40 இடங்களில் நட்திய அதிரடி சோதனையில் இதுவரை கணக்கில் வராத இந்திய ரூபாயில் 24 கோடி ரூபாயும், வெளிநாட்டு கரன்சியில் 9 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களில், வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கல்கி பகவானுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதைய பாளையம் ஆசிரமத்தில் வருமான வரி சோதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடக்கிறது. கல்கி பகவான் என தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட விஜயகுமார், ஆரம்பக் காலக்கட்டத்தில் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் ஆசிரமம் அமைத்த பின்னர் கோடியாக கோடியாக சம்பாதித்தார் என்றும் கூறப்படுகிறது.