ஆஸ்திரியாவில் ஒரு நபர், உயிரிழந்த தன் தாயின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஓராண்டிற்கும் மேலாக உடலை பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவை சேர்ந்த 89 வயது பெண், கடந்த 2020- ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இயற்கையாக உயிரிழந்திருக்கிறார். அவரின் 66 வயதுடைய மகன், தாயின் உடலை, துர்நாற்றம் வீசாமல் இருக்க குளிர்பதன பைகள் வைத்து, கடந்த ஓராண்டாக வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் அறைக்குள் வைத்திருந்துள்ளார்.
தற்போது வரை, 50,000 யூரோக்கள், தாயின் ஓய்வூதியத்தின் மூலம் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், அந்த பகுதியில் புதிதாக பணியில் சேர்ந்த அஞ்சல்காரர், “உங்கள் தாயை பார்த்த பின்பு ஓய்வூதியத்தை தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபர் தன் தாயாரை பார்க்க விடவில்லை.
எனவே, அவர் மீது சந்தேகமடைந்து, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உண்மை தெரியவந்துள்ளது. அதாவது, அவர் தன் தாயின் சடலத்தை பதப்படுத்தி மம்மி போன்று செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, குற்றம் சாட்டப்பட்ட நபர் வருமானத்திற்கு வழியின்றி இந்த குற்றத்தை செய்ததாக தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல், உடலை பதப்படுத்தி வைக்க தேவையான ஐஸ்கட்டிகள் மற்றும் பேண்டேஜ்கள் அவரிடம் இல்லாததால், பூனையின் கழிவுகளை வைத்து பதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.