குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபாவினை தன்னுடைய பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தார். இதனையடுத்து மாநில ஆளுநரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபாவானி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிந்தது.
மக்களுக்காக சேவை சேவையாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் மாறுவது இயற்கையான ஒன்றுதான் என்று தெரிவித்தார். இவருடைய ராஜினாமா பதவியை தொடர்ந்து நடப்பு 2021ஆம் வருடம் கடந்த 6 மாதங்களில் மட்டும் பாஜகவை சேர்ந்த முதலமைச்சர்கள் ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த பாஜகவின் எடியூரப்பா மீது அக்கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அதனையடுத்து புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார். அதேபோல உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த பாஜகவின் திரிவேந்திர சிங் ராவத்திற்கு எதிராக கட்சியின் மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியதையடுத்து அவரும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய முதல்வராக ராஜ்யசபா எம்.பி., திரத் சிங் ராவத் பதிவியேற்றார். அவரும் நான்கைந்து மாதங்களிலேயே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து புதிய முதலமைச்சராக சிட்டிங் பா.ஜ.க. எம்.எல்.ஏ., புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக்கொண்டார். இந்த வரிசையில் தற்போது குஜராத் மாநில முதலமைச்சராக ராஜினாமா செய்துள்ள விஜய் ரூபாவானியும் சேர்ந்துள்ளார். இவ்வாறு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.