ஜவுளிக்கடையில் வாலிபர் நூதன முறையில் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஜவுளிக் கடையில் துணி வாங்குவதற்காக சென்ற வாலிபர் ஒருவர் ஏராளமான துணிகளை தேர்வு செய்தார். இதனையடுத்து அந்த வாலிபர் துணிகளை அணிந்து பார்க்க வேண்டும் என்று கூறி அங்குள்ள ஒரு அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் அந்த வாலிபர் துணிகளை வாங்கவில்லை என்று கூறிவிட்டு திரும்பி செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில துணிகள் குறைந்ததால் அந்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு ஊழியர்கள் அவரை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த வாலிபர் தனது உடலின் ஒன்றன் மேல் ஒன்றாக சில சட்டைகளையும், உள்ளாடைக்குள் மறைவாக சில ஆடைகளையும் மறைத்து வைத்து திருடி செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த கடை ஊழியர்கள் அந்த வாலிபரிடம் இருந்து துணிகளை மீட்டதோடு அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.