தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதன் மூலமாக தமிழகத்தின் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி களையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்படும்.
இதுதவிர காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மேலும் திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி மற்றும் மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்துள்ள பேரூராட்சிகள் ஊராட்சிகள் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர், ஆகிய ஐந்து நகராட்சிகளை இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.