சாலையின் குறுக்கே போகும் மின்கம்பிகளுடைய உயரத்தை அதிகரிக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி அமைந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் மடத்துக்குளம் பகுதியை சுற்றி அதிக அளவில் காற்றாலைகள் இருப்பதனால் உதிரிபாகங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் அடிக்கடி இந்த சாலை வழியாக வர வேண்டிய நிலை இருக்கின்றது. இதனையடுத்து விவசாயத்திற்கு கதிரடிக்கும் எந்திரங்கள் கொண்டு வரும் வாகனம், பெரிய அளவிலான கிரேன்களை கொண்டு வரும் வாகனம், வைக்கோல் ஏற்றி வரும் வாகனம் என அதிகம் உயரம் கொண்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றது.
இந்நிலையில் வைக்கோல் உள்ளிட்ட அதிக அளவு ஏற்றி வரும் வாகனங்களை காவல்துறையினர் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனாலும் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் அடிக்கடி இந்த பகுதியை கடந்து போகிறது. இவ்வாறு செல்லும் வாகனங்கள் சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்லும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவற்றின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இவ்வாறு சாலையின் குறுக்கே வாகனங்கள் மின்கம்பிகளை கடக்கும் பகுதிகளில் அவை அறுந்து விழுந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழிமுறைகள் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.