கணவன் மது அருந்துவதாக கூறியதால் தாய் மற்றும் 2 குழந்தைகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடக்குப்பம் கிராமத்தில் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், திவ்யா மற்றும் திவாகரன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதில் திவ்யா தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். அதன்பின் மகன் திவாகரன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் பாக்கியராஜ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதால் அதை மனைவி பாக்கியலட்சுமி தட்டி கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து குடிபோதையில் வந்த பாக்கியராஜ் தனது பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் மீண்டும் மது அருந்த போவதாக மனைவியிடம் பாக்கியராஜ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி தனது மகன் மற்றும் மகளுடன் அதே பகுதியில் இருக்கும் சொந்த நிலத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.