சிக்கிம் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. வடக்கு மாநிலங்களில் ஒன்று சிக்கிம் மாநிலம். இங்கு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக தினசரி தொற்றின் பாதிப்பு 70க்கும் கீழ் இருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது அம்மாநிலத்தில் மொத்தமாக 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 30,565 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 377 ஆக உள்ளது. இதில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஜிபி உபாத்தியாயா தெரிவித்துள்ளதாவது: “9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் பட்டது. 50 சதவீத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு சிக்கிம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தொற்று மீண்டும் வேகமாக அதிகரிக்கும்.
இதனை கருத்தில் கொண்டு மேலும் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. மாணவர்களின் உடல்நிலையில் சமரசம் செய்து கொள்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.