டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
பள்ளிக்கல்வித் துறை, வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை முதலியவைகளின் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். மாவட்ட ஆட்சியர் டெங்கு குறித்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்க, ஆசிரியர்களோ செல்ஃபோனை தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
உதாரணமாக வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, சில மாணவர்கள் மட்டும் வேறு உலகத்தில் சஞ்சரித்து கனவு காண்பார்கள். இன்னும் சில மாணவர்கள் ஓவராக போர்டை முறைத்துப் பார்த்த அயர்ச்சியில் தூங்கி வழிவார்கள். கிட்டத்தட்ட இதேபோல்தான் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசிய வேளையில் ஆசிரியர்கள் தங்களது செல்ஃபோனுடன் சேர்ந்து தாங்களும் வேறு உலகத்துக்கே சென்றுவிட்டனர். ஒரு ஆசிரியர் அமேசானில் ஆர்டர் செய்த பொருள் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது என ஆவலோடு பார்த்துக்கொண்டேயிருந்தார்.
மற்றொரு ஆசிரியர் நடிகை ராதிகா எந்த டிவி சோவிற்கு(TV Show) தலைமை தாங்கப்போகிறார் என்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியிருந்தார். இன்னும் சில ஆசிரியர்கள் வாட்ஸப்பில் நோட்டிபிக்கேஷன் வருகிறாதா இல்லையா என்று செல்ஃபோனை வெறித்தனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். மெசெஜ் வராத ஏக்கத்தில் சில ஆசிரியர்கள், கால் செய்தே பேசிவிட்டார்கள் என்றே பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த இடம்தான் கொஞ்சம் பயங்கரமான இடம், சிரிப்ப கண்ட்ரோல் பண்ணிக்கோங்க… இந்த வகை ஆசிரியர்கள் கொஞ்சம் வித்தியாசமான ஆட்கள்… ஆம், இவர்கள் வீட்டில் கூட இவ்வளவு நிம்மதியான உறக்கத்தை உறங்கியிருக்கமாட்டார்கள்போல, உறக்கம்னா உறக்கம் அப்படியொரு உறக்கம். அவர்கள் உறங்கும் காட்சியை பார்த்தால், இரவில் தூக்கம் வராமல் பேஸ்புக்கில் புலம்பும் 90ஸ் கிட்ஸ்கள் இவர்களிடம் டிப்ஸ் கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு வந்த ஆசிரியர்கள் இப்படி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களின் மாணவர்கள் நிலையை நினைத்தால்தான்…