திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யாருக்கெல்லாம் இலவச தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் சாமி தரிசனத்திற்கு சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலைமை தற்போது சீரடைந்து பிறகு மீண்டும் தரிசனம் தொடங்கியது. இருப்பினும் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் தொற்று பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால், கடந்த 8ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இருந்து பல பக்தர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கடும் போட்டி நிலவுவதால், டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு திரும்புகின்றனர். முதற்கட்டமாக திருப்பதி தேவஸ்தானம் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இதனால் திருப்பதி வரும் பக்தர்களில் பலரும் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர். சிலர் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்றும், ஆந்திராவின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் தற்போதைக்கு கிடையாது என்று விளக்கம் கொடுத்துள்ளது.