இறந்ததாக கூறப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் பேசும்படியான காட்சி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பயணிகள் விமானம் ஒன்றை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினர் கடத்தினர். அந்த விமானத்தை கொண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரத்தின் மீதும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவமானது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இதில் 3000 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளைக் காரணமாக செயல்பட்ட அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ராணுவ படைகளால் பாகிஸ்தானில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் புதிய தலைவராக அய்மன் அல்-ஜவாஹிரி பதவியேற்றார்.
இதனையடுத்து அவர் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் இதனை தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா உறுதி செய்யவில்லை. அதே சமயத்தில் அவர் இறந்தது குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் இரட்டை கோபுர தாக்குதலில் நினைவு தினமானது நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கிடையில் அன்று அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இறந்துபோனதாக கூறப்பட்ட அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி தோன்றியுள்ளார். மேலும் அவர் அதில் ஒரு மணி நேரம் 37 விநாடிகள் பேசியுள்ளார்.
இந்த காணொளியை அமெரிக்காவின் தனியார் உளவு அமைப்பான எஸ்.ஐ.டி.இ ஆராய்ந்துள்ளது. அதிலும் இந்த காணொளியானது செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது என்று உறுதி செய்துள்ளனர். அதில் “ஒருபோதும் ஜெருசலேம் யூதர்கள்மயமாகாது” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சிரியாவில் இருக்கும் ரக்கா நகரில் உள்ள ரஷ்யா படைகளை அல்-கொய்தா அமைப்பினர் தாக்கியதற்காக அவர்களை பாராட்டியுள்ளார். ஆனால் ஆப்கானில் 20 வருடங்களாக இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்கள் அந்நாட்டை கைப்பற்றியது குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.