ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பல்கலைகழகங்களில் கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்களின் உயர் கல்வி மந்திரி தெரிவித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு ஆட்சி செய்த போது பெண்களுக்கு கடும் விதிகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்கள். அதன்படி ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, உடலை முழுவதுமாக மறைக்கும்படியான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், கல்வி கற்பதற்கும் பணிக்கு செல்வதற்கும் அவர்களுக்கு அனுமதி இல்லை என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
இவற்றை பெண்கள் மீறும் பட்சத்தில், அவர்களை பொது இடங்களில் நிறுத்தி இழிவுப்படுத்தினார்கள். அவர்களை தாக்கவும் செய்தனர். எனவே தற்போது நாட்டை மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியிருப்பதால், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை தொடர்பில் உலக நாடுகள் வருத்தம் தெரிவித்திருந்தது. எனினும் தலிபான்கள், முன்பு ஆட்சி நடத்தியது போன்று இல்லாமல் தற்போது பெண்களுக்கு சமமான உரிமைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள்.
எனினும், இருபாலர் கல்வி பயில அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தலீபான்களின் உயர்கல்வி மந்திரியான அப்துல் பாக்கி ஹக்கானி, உயர் கல்வி குறித்த புதிய கொள்கைகளை வெளியிட்டிருக்கிறார். காபூலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் முதுகலைப் பட்டங்கள் வரை பல்கலைகழகங்களில் பெண்கள் கற்கலாம் என்று கூறியிருக்கிறார். எனினும், பாலின அடிப்படையில் வகுப்பறைகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தான் பெண்கள் கல்வி கற்க முடியும். மேலும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.