விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில் திடீரென பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் சென்று கரைக்கலாம் என காவல்துறை அறிவித்திருந்த நிலையில் திடீரென காவல்துறையினர் அங்கு சிலைகளை கரைக்க தடைவிதித்துள்ளனர். இதனால் விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு செல்கின்ற வழியில் இருக்கும் உப்பனாற்றில் பொதுமக்கள் சிலைகளை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர்.
அப்போது ஒரு தம்பதி விநாயகர் சிலை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்ட நிலையில் அருகிலிருந்த முட்செடிகள் மீது பட்டு தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அடைத்துள்ளனர்.