தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரை அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையை புறக்கணித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கியவுடன் அவசர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிகழ்வுகள் குறித்து அவையின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். ஒன்று திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரத்தைச் சேர்ந்த வாசிம் அக்ரம் (வயது 40) சமூக ஆர்வலர். குறிப்பிட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வாணியம்பாடி காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்துள்ளார்.
10. 9. 2021 அன்று காலை மசூதியில் தொழுகை முடித்து தனது மகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வழியில் கூலிப் படையினரால் கொடூரமாக பயங்கர ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவக் காட்சி ஊடகத்தின் வாயிலாக… பத்திரிக்கை வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த கொலையை செய்த குற்றவாளிகளை உடனடியாக இந்த அரசு கண்டு பிடித்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என்று கவனத்தில் கொண்டு வந்திருக்கின்றேன், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன்.
இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள்… நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று. தொடர்ந்து அப்போது இருந்த எதிர்க்கட்சித் தலைவர், இப்போது இருக்கின்ற முதலமைச்சர் மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலை நீட் இரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அதோடு இந்த அரசு தெளிவான முடிவு எடுத்து அறிவிக்கப்படவில்லை இதனால் மாணவர்களும் பெற்றோரும் குழப்பத்திற்கு உள்ளானார்கள். ஜூன் மாதம் 23ஆம் தேதி மேதகு ஆளுநர் உரையிலே நேரடியாக முதலமைச்சரை நான் கேட்டேன். இந்த ஆண்டு நீட் நடக்குமா ? நடக்காதா ? மாணவர்களும், பெற்றோரும் குழப்பமான நிலையில் இருக்கிறார்கள்.
இதற்கு ஒரு தெளிவான முடிவை நீங்கள் அறிவித்ததால் தான் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டேன். அதற்கு முதலமைச்சர் அவர்கள் மழுப்பலான பதிலை தெரிவித்தார். அப்போது தெளிவான முடிவை இந்த அரசு அறிவிக்கவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகும் தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியதால் அதை நம்பி மாணவர்கள் நீட் தேர்வில் தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்ளாத… குழப்பமான சூழ்நிலையில் நீட் தேர்வை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சேலம் மாவட்டம் மேட்டூர் கூலினுறை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று தற்கொலை செய்துகொண்டான்.
இது மிகுந்த வேதனையும், துயரத்தை அளிக்கின்றது. அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு இதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். அவர்கள் தொடர்ந்து நீட் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சரும், அமைச்சர்களும், கட்சியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார் படுத்திக் கொள்ளவில்லை.
இதனால்தான் மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதற்கு முழு பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதை அவையிலே தெரிவித்து தகுந்த பதில் அளிக்காத காரணத்தினால் நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து இருக்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.