பிரிட்டனில் 11 வயது சிறுமி, பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து சென்றதால் அநியாயமாக தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலுள்ள Leicester என்ற நகரில் வசிக்கும் கரீன் லுன், என்பவரின் மகளான 11 வயது சிறுமி மேக்கி, கடந்த மாதத்தில் குடும்பத்தினரோடு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது, அங்கு சிறிதான மூக்குத்தி ஒன்றை குத்தியிருக்கிறார். அதன்பின்பு, பள்ளிக்குச் சென்ற சிறுமியை பள்ளி நிர்வாகம் தண்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சிறுமியை பிற மாணவர்களுடன் உட்கார வைக்காமல் தனியாக வைத்துள்ளார்கள். மேலும், அவருக்கு கல்வி கற்கக்கூடிய நேரத்தையும் குறைத்துள்ளனர். இது மட்டுமல்லாமல், இடைவெளி நேரத்திலும் சிறுமியை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், சிறுமியின் தாய் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, பள்ளிக்கு மூக்குத்தி அணிந்து செல்லக்கூடாது என்பது எங்களுக்கு தெரியவில்லை. தெரியாமல் செய்த தவறுக்காக என் மகளை அநியாயமாக தண்டித்திருக்கிறார்கள். காதில் தோடு அணிந்து கொள்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் மூக்குத்தி அணிந்து கொள்ள அனுமதி இல்லையாம்.
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? மூக்குத்தியை அகற்றினால் தான் தண்டனை கிடையாது என்கிறார்கள். ஆனால் தற்போது உடனடியாக மூக்குத்தியை நீக்க முடியாது. ஏனெனில், மூக்குத்தி குத்திய இடத்தில் காயம் ஆறுவதற்குள் அதனை நீக்கிவிட்டால் தொற்றாக மாறிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகத்தின் முதல்வர், தங்கள் பள்ளிக்கு என்று சில கொள்கைகள் இருக்கிறது. அதனை மாற்ற முடியாது என்று கூறிவிட்டார்.