ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் நிலப்பரப்புகளை தாக்கும் திறன் கொண்ட க்ரூஸ் என்னும் ஏவுகணையை வடகொரியா வடிவமைத்து இன்று சோதனை நடத்தியுள்ளது. இதனை அந்நாட்டின் பிரபல செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஆனது தாழ்வாகப் பறக்கும் தன்மை கொண்டவை. மேலும் இது 1600 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கக்கூடிய சக்தி கொண்டது. இருப்பினும் இன்றைய சோதனையில் இந்த ஏவுகணையானது 1500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட கொரியாவின் ஆய்வாளர் அங்கித் பாண்டா கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இது நாட்டின் முதல் நெடு தொலைவு பயணம் செய்த ஏவுகணையாகும். இந்த ஏவுகணையானது அணு ஆயுதத்தை சுமந்து செல்கிறது” என்று கூறியுள்ளார்.
குறிப்பாக பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடியிலும் கூட அதிக பொருட்செலவில் ஏவுகணைகளை வடிவமைத்து வருகின்றனர். இது போன்று வடகொரியா ஆயுதங்களை மேம்படுத்துவதினால் சர்வதேச சமூகத்திற்கும் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் நட்பு நாடான ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பாதுகாப்பில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக அமெரிக்கா உளவு அமைப்புகள் ஆய்வு செய்து வருவதாக தென்கொரியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக அணு ஆயுதங்கள் செயல்பாட்டை ரத்து செய்வது குறித்து தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் உயரதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.