இனிமேல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரான்சில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உணவகங்கள், சுற்றுலாத்தளங்கள், தொலைதூரப் பயணங்களுக்கு செல்லும் பொழுது கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரமாகவும், கடந்த 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றாக அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கான ஆதாரமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் இருந்து 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விதிமுறைகளானது வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆகவே செப்டம்பர் 30யில் இருந்து 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவராயினும் பொது இடங்களுக்கு செல்வதற்கு கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு குடும்பம் உணவுக்காக வெளியே செல்லும் பொழுது கொரோனா பாஸ்போர்ட்டை காட்டினால் மட்டுமே அவர்களின் குழந்தைகளும் உணவகங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக அக்டோபரில் விடுமுறைக்காக பிரான்ஸில் மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். ஒருவேளை இந்த தகவல் குறித்து அறியாமல் தங்கள் பிள்ளைகளுடன் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இது இன்னலை ஏற்படுத்தும்.
இதனை தவிர்க்க வேண்டுமென்றால் 72 மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆனால் பிரான்சில் கொரோனா பரிசோதனை இலவசம் அல்ல. இல்லையெனில் கொரோனா பாஸ்போர்ட் தேவைப்படும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். இது சாத்தியமாகாத ஒன்று. குறிப்பாக இந்த பாஸ்போர்ட் திட்டமானது நவம்பர் 15 வரை அமலில் இருக்கும் என்றும் மேலும் இது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரான்சில் சுற்றுலா செல்ல திட்டமிட்டுபவர்கள் இந்த திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு செயல்படுவது நன்மை பயக்கும்.