இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நாளை இந்தப் போட்டி தொடங்குகிறது.
தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெற்றாலும் அவர் இந்திய அணியில் களமிறங்கப் போவதில்லை. ஏனெனில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ராணுவப் பயிற்சி, சிறிய இடைவேளை போன்ற காரணங்களால் ஒருநாள், டி20 போட்டிகளில் தோனியை காண முடியாமல் அவரது ரசிகர்கள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், தோனியின் ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸாக தோனியின் வருகை குறித்த செய்தி வெளியாகியுள்ளது. நாளை ராஞ்சியில் நடைபெறும் போட்டியைக் காண தோனி வரவுள்ளதே அந்த செய்தியாகும். இதற்காக தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவரும் அதற்கு ஓகே என்று கூறிவிட்டார் என்று ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.நீண்ட நாட்களுக்குப் பின் மைதானத்தில் தோனியை பார்க்கவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.