இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தனது வீட்டிற்கு கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களை அழைத்து வந்தார். அப்போது நண்பர்களுக்கும் உள்ளூரை சேர்ந்த சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து கீழ நாலுமூலைக்கிணற்றைச் சேர்ந்த சிலர் வேனில் வந்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களை தாக்கினர். இதனால் காயமடைந்த முத்துக்குமார், சுடலைமணி, எஸ்தர், முத்துக்கனி, மாதவி ஆகிய 5 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து புகாரின்படி காவல்துறையினர் விஜயன், சென்னி மற்றும் ஒரு பெண் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.