நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாக தனுஷ் என்ற மாணவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவச் செல்வங்களே நம்பிக்கையை இழக்காதீர்கள், வாழ்ந்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார். திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. கட்டாயம் மத்திய அரசின் ஏகபோக ஆக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், திமுக அரசு திட்டம் வகுத்துள்ளது.
மேலும் இன்னும் மாணவர்களின் உயிர்களை காவு கொடுக்க தமிழ்நாடு ஆயத்தமாக இல்லை. நீட் தேர்வு எழுதிய மாணவ செல்வங்கள், எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையை வாழவேண்டும். நம்பிக்கையை இழக்க கூடாது. உங்கள் உயிரைப் போக்கிக் கொண்டால், பெற்றோர்களும் உறவினர்களும் மிகுந்த வருத்தம் அடைவார்கள். வாழ்நாள் முழுவதும் கண்ணீர் விடுவார்கள். சமூகத்திற்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் நீங்கள் ஆற்ற வேண்டிய பெரும்பணி நிறைய உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.