பிரித்தானியாவில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் Sandwell, West Midlands-ல் ஸ்மெத்வெக் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள லண்டன்டெர்ரி சாலையில் பட்டப்பகலில் 31 வயதுடைய ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 31 வயதுடைய நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின் அந்த நபர் உயிர் பிழைத்து பத்திரமாக வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் சம்பவம் நடந்த அந்த இடத்தில் BMW கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்புடைய 15 வயது சிறுவன் மற்றும் 34 வயது பெண் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகள் மற்றும் தகவல் தெரிந்தவர்கள் 101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.