பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
சமீபகாலமாக பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இதனை காரணமாக வைத்து எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, அரசு நிறுவனங்களை களங்கப் படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி என் வி ரமணா அமர்வு விசாரித்து வருகின்றது. இந்த வழக்கில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. மேலும் இந்த விசாரணை தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் எதையும் தாக்கல் செய்ய மாட்டோம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. நாங்கள் மென்பொருள் என்ற எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறி இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.