போலீஸ் ஏட்டுவை வெட்டிய வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு மது வாங்க சென்ற ஒருவர் ஊழியரிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு ராஜு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தகராறில் ஈடுபட்ட நபரை வெளியில் போகும்படி ஏட்டு ராஜு அறிவுறுத்தினார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து தகராறு செய்ததோடு திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீஸ் ஏட்டு ராஜுவை சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜுவை அருகில் இருப்பவர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையில் ஏட்டு ராஜுவை அரிவாளால் வெட்டிய நபரை அக்கம்பக்கத்தினர் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த முருகன் என்பதும், மரம் ஏறும் தொழிலாளியான இவர் இளநீர் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அதன்பின் முருகன் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் ஈரோடு கோர்ட்டில் முருகனை ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.