தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 22 வரையும் மனு தாக்கல் செய்ய முடியும். அதன்பிறகு செப்டம்பர் 23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.