கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் பணகுடி பகுதியில் வசிக்கும் ராமையா மதுரை பகுதியில் வசிக்கும் திருப்பதி, குமார் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் 1,500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.