இந்து மகாசபா சார்பில் வழங்கப்பட்ட 508 பிள்ளையார் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன .
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோவில்களுக்கு இந்து மகாசபாவின் சார்பில் 508 விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் 10-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகள் மற்றும் பொது இடங்களில் பிள்ளையாரின் சிலையை வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்த பிறகு அதனை எடுத்துச் சென்று ஆறு, குளம் போன்றவற்றில் கரைத்து விடுவர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ, கூட்டமாக பூஜைகள் செய்யவோ தடை விதிக்கப்பட்டது.
இதற்கு மாறாக அவரவர் வீடுகளில் சிலையை வைத்து பூஜை செய்து நீர்நிலையில் கரைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இந்து மகாசபா சார்பில் மொத்தம் 508 விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை நேற்று குழித்துறை தாமிரபரணி, அனந்தன்குளம், வெள்ளமடம் ஆறு, ஆண்டார்குளம் ஆறு, தோவாளை கால்வாய், பார்வதிபுரம் ஆறு,கார்த்திகை வடலி குளம், சம்புகுளம் போன்ற இடங்களில் கரைத்து விட்டனர்.
இதில் இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மேலசுரங்குடியில் உள்ள விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்து அதனை கார்த்திகை வடலியில் கரைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்திய சிவசேனா சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.