ராணுவ குடியிருப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களை வெளியேறுமாறு தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தங்க வைப்பதற்காக அங்கிருக்கும் மக்களை மூன்று நாட்களில் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கந்தஹார் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த குடியிருப்பில் இருக்கும் குடும்பங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அதிலும் தலீபான்களின் அட்டகாசத்தால் ஆண்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கந்தஹார் ராணுவ குடியிருப்பு வளாகத்தை பொறுத்த வரை ஆப்கான் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த நடவடிக்கை குறித்து தலீபான்கள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. அதிலும் தலீபான்கள் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை கைப்பற்றி அங்கும் இதே போன்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று இறுதியில் அவை கலவரமாக முடிந்து விடுகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தில் தலீபான்கள் எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்றால் அனுமதி பெற வேண்டும் என்று தலீபான்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.