தமிழகத்தில் 9 மாவட்டங்களில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இது குறித்து பாமக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கட்சியினுடைய வளர்ச்சி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சட்டமன்ற தேர்தலின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. கட்சியில் சரியான தலைமை இல்லாததனால் நமக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நம்மால் கூட்டணி கட்சிகள் பயனடைந்தன. ஆனால் அவர்களால் நமக்கு பயனில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.