தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் 35 வயதுடைய ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நபரின் தலையை வேறு எங்கோ போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் அவரது உடல் மட்டும் காட்டு பகுதியில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சேரன்மகாதேவி துணை சூப்பிரண்டு பார்த்திபன், முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தடவியல் நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.
மேலும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதிக்குள் மோப்பம் பிடித்தவாறே சென்றுள்ளது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழச்செவல் நயினார் குளம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணனின் மகனான சங்கர சுப்பிரமணியன் என்பதும், அவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.