தமிழகத்தில் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் மற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று நெல்லையை சேர்ந்த அப்துல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறும் பள்ளிகளின் விவரங்கள் மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கு குறித்த முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.