விதவைப் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2009-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவாலும், அவரது மகன் கடந்த 2013-ஆம் ஆண்டு விபத்திலும் இறந்து விட்டனர். இதனால் மேகலா அவரது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலா நெல்லை மாவட்ட ஆட்சியர், சேரன்மாதேவி உதவி மாவட்ட ஆட்சியர், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் சிதம்பரத்திலுள்ள தனக்கு சொந்தமான நிலங்களில் சிலர் மோசடியாக பத்திரப்பதிவு செய்து அபகரிக்க முயற்சி செய்து வருவதாக புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மேகலா களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் மேகலா திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை அவரது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று மேகலாவை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அவரை சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர்.