கார் திடீரென தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் விவசாயியான நாராயணபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாராயணபெருமாள் அவரது உறவினரை காரில் ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றார். அதன்பின் அவரை அங்கு இறக்கி விட்டு மீண்டும் நாராயணபெருமாள் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பணகுடி பகுதியில் உள்ள காவல்கிணறு மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் என்ஜினிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைப் பார்த்த சாலை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் நாராயணபெருமாளிடம் இது குறித்து கூறியுள்ளார்.
அதன் பின் சுதாரித்துக் கொண்ட நாராயணபெருமாள் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி தள்ளி சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரம் கழித்து கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கார் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பணகுடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.