பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கான நிதியை அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை அளிக்க மறுத்துவிட்டன. தற்போது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதில் அவர்களின் கொள்கைகளை மக்களின் மீது வலுக்கட்டாயமாக புகுத்தி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக வறுமையும் பசியும் நாட்டின் மக்களை வாட்டி வதைகிறது. இது குறித்து ஐ.நா. சபை பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் “ஆப்கான் மக்கள் பொருளாதார சரிவை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு வசிக்கும் 18 மில்லியன் மக்கள் நாளொன்றுக்கு ஒரு டாலர் கூட சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ளனர். மேலும் உணவு பற்றாக்குறையின் காரணமாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சரான அமீர் கான் முடாகி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “அமெரிக்கா படைகளை வெளியேற்ற அனுமதித்தற்கு அவர்கள் எங்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். மேலும் அமெரிக்கா ஒரு பெரிய நாடாக இருந்தாலும் எங்களுக்கு உதவுவதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும்.
குறிப்பாக மனிதாபிமான அடிப்படையில் 1.2 மில்லியன் டாலர்களை ஐ.நா. சபை நன்கொடையாக வழங்கவுள்ளது.அதிலும் அமெரிக்காவில் இருந்து சுமார் 64 மில்லியன் டாலர் நிதி கிடைத்துள்ளது. இதற்காக எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் உலகம் முழுவதிலும் இருந்து உதவிகளை பெற தயாராக இருக்கின்றோம். மேலும் நாட்டின் வறுமையை தீர்க்க ஊழல் இல்லாமல் முழு நிதியையும் பயன்படுத்த இருக்கிறோம். அதிலும் இஸ்லாமிய எமிரேட் ஆனது உலக நாடுகள் வழங்கும் நன்கொடைகளை வெளிப்படையாக தேவைப்படும் இடங்களில் மக்களுக்கு அளிக்கின்றோம்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை ஐ.நா சபையின் உலக உணவு திட்டம் அமைப்பு வழங்கி வருகிறது.
இதற்காக மனிதாபிமான விமானங்கள் காபூலுக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவின் உலக உணவு திட்ட அதிகாரி டோம்சன் பிரி செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “ஆப்கானிஸ்தானில் 90%க்கும் அதிகமான குடும்பங்கள் உண்பதற்கு உணவு இன்றி பசியால் வாடியுள்ளனர். இனி குளிர் காலம் வர உள்ளதால் எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். மேலும் மனிதாபிமான சேவைகளை வழங்குவதற்காக கடந்த மூன்று நாட்களில் 3 சரக்கு விமானங்கள் அங்கு சென்றுள்ளன. அதிலும் உலக சுகாதார அமைப்பின் சார்பாக மருத்துவ பொருட்கள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு பாகிஸ்தானின் விமான தளத்தின் மூலம் மசார்-இ-ஷெரீப், கந்தஹார், ஹெராத் போன்ற பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.