அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யரின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலம் என டெல்லி அணியின் உதவி பயிற்சியாளரான முகமது கைப் கூறியுள்ளார் .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரவரிசையில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது பகுதி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் வருகின்ற 22-ம் தேதி மோத உள்ளது .இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முகமது கைப் பேட்டி ஒன்றில் கூறும்போது,” முதல்பாதி ஐபிஎல் தொடர் முடிந்து மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எங்கள் அணியில் உள்ள வீரர்கள் பலர் தொடர்ந்து சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார்கள். இதனால் சரியான கலவையில் எங்கள் அணி அமைந்துள்ளது.
மேலும் இரண்டாவது பகுதி ஐபிஎல் போட்டியை நாங்கள் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும். இதில் இந்தியாவில் நடத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதே செயல்பாட்டை அமீரகத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் இருநாட்டு சீதோஷ்ண நிலையில் வித்தியாசம் இருப்பதால் முதல் பாதி ஆட்டத்தை ஒப்பிடுகையில் சில வீரர்களின் பங்களிப்பில் சில மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். எனவே அவரது வருகை எங்களுக்கு மிகப்பெரிய பலமாகும். கடந்த இரு சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் அற்புதமான வீரர் .இந்தத் தொடரிலும் அவர் களம் இறங்குவதை எதிர்நோக்கி உள்ளோம் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.